வாஸ்து என்பது உயிர்த்துடிப்புள்ள ஒரு சக்தி. ஹிந்து தர்மத்தில் உள்ள வாஸ்து சாஸ்திர புத்தகங்கள் கட்டிடத்தின் ஆரோக்கியத்தையும் அதில் வசிப்பவர்களுக்கு அது தரும் பலன்களையும் விரிவாக எடுத்துரைக்கின்றன. ஒரு மனையைத் தேர்ந்தெடுக்கும் விதம், அதை கட்டிடத்திற்காக தயார் படுத்தும் முறை, கட்டிடத்தை ஆரம்பிக்கும் விதம், கட்டிடத்தின் வரைபடம், அதில் அறைகளின் அமைப்பு, பூஜை அறை, சமையல் அறை, படுக்கை அறை, அதிக நேரம் அனவைரும் இருக்கின்ற வாழும் அறை, நடமாடும் பாதை, வாராந்தா, கதவுகள், ஜன்னல்கள், மரவேலைப்பாடுகள், கட்டிடத்தைச் சுற்றி உள்ள சுற்றுச் சுவர், கழிவறை என அனைத்தைப் பற்றியும் வழிகாட்டு நெறிகளை வாஸ்து சாஸ்திரம் திறம்பட எடுத்துரைக்கிறது.
இந்த சாஸ்திர நெறிகளைக் கடைப்பிடிக்காமல் பழைய காலத்தில் அரண்மனை உள்ளிட்ட ஒரு கட்டிடமும் கட்டப்பட்டதில்லை. ஏனெனில் ரிஷிகளின் அகவுணர்வில் தோன்றிய சாஸ்திரத்தைப் பின்பற்றும் நெறிமுறை, கட்டிடத்தில் வாழ்கின்றவர்களுக்கு மிக அதிகமான நன்மைகளைப் பெற வழி வகுக்கிறது.
கட்டிடத்தின் ஒவ்வொரு திசையும் ஒரு கிரகத்தின் ஆதிபத்தியத்திற்கு உட்படுகிறது. ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு விதமான பலனைத் தருகிறது.
இதே போலவே 4000 வருடங்களுக்கு முன்னரே தோன்றிய சீன வாஸ்து சாஸ்திரமான ஃபெங் சுயியும் நல்ல ஆரோக்கியமான வாழ்வு, சுகமான குடும்ப உறவுகள், நீடித்த ஆயுள், துடிப்புள்ள தாம்பத்ய வாழ்க்கை, வளமான செல்வ நிலை, புகழ் ஆகியவை உள்ளிட்ட அனைத்து நலன்களையும் பெற வழிகளை சுட்டிக் காட்டுகிறது.
'ச்சி' (Chi) என்ற நுண்ணிய மின்காந்த அலையே பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தொடர்பு படுத்தி இணைக்கிறது என்று ஃபெங் சுயி சாஸ்திரம் சொல்கிறது. ஒரு கட்டிடத்தின் வடிவமைப்பும் அதன் உள்ளமைப்பும் அலங்காரமும் 'ச்சி' சக்தியை அதிகப்படுத்தி அதில் வசிப்போரை இன்பம் துய்க்க வழி வகை செய்கிறது. ஃபெங் சுயியை பின்பற்றுவோருக்கு எல்லா நலன்களும் கிடைப்பது உறுதி.
நூற்றுக்கணக்கான சிக்கல் மிகுந்த விதிகள் வாஸ்து சாஸ்திரத்திலும் ஃபெங் சுயி சாஸ்திரத்திலும் இருப்பதால் இவற்றை நுணுகி ஆராய்ந்து உரிய முறையில் கடைப்பிடிக்கச் செய்ய, தகுந்த வழிகாட்டும் வல்லுநர்கள் தேவை; அவர்கள் இந்த இரண்டிலும் நிபுணர்களாக இருப்பதும் மிக அவசியம். என்றாலும் கூட சில அடிப்படை விதிகளை அனைவருமே தெரிந்து கொண்டால் அடிப்படையான தவறுகள் செய்யாமல் இருக்கலாம். அதன் மூலம் வரவிருக்கும் அபாயத்தைத் தவிர்க்கலாம்.
கடல் போன்ற பெரிய சாஸ்திரத்திலிருந்து சில அடிப்படை விதிகளை மட்டும் கீழே காணலாம்.ஒரு கட்டிடத்தின் மிக முக்கியமான பகுதி பிரம்மஸ்தலம் என்பதாகும். பிரம்மஸ்தலம் என்பது கட்டிடத்தின் மையப் பகுதி. இது எப்போதும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையான விதி!
சாணக்யர் தனது அர்த்தசாஸ்திரத்தில் மன்னனின் கோட்டையின் நடுவில் சிவன், வைஸ்ராவனன், அஸ்வினி தேவதைகள், லக்ஷ்மி மற்றும் மதிராவுக்குக் கோவில் கட்டுமாறு அறிவுரை பகர்கிறார்.
இதே போலவே வீடுகளிலும் வணிக வளாகங்களிலும் மையப் பகுதியானது காலியிடமாக இருப்பதோடு மிக மிக சுத்தமாக வைக்கப்படுவது அவசியம். மிகப் பெரிய சீரும் சிறப்புமாக உள்ள செல்வம் கொழிக்கும் வணிக வளாகங்களுக்குச் செல்லும் போது இந்த உண்மையைப் பார்த்தால் அங்கு செல்வம் சேர்வதன் ரகசியம் நமக்குப் புரியும். கிழக்கு முகமாகவோ அல்லது வடகிழக்கு முகமாகவோ பார்ப்பது கட்டிடத்திற்கு நன்மை தரும்.
ஒரு கட்டிடம் ஒரு போதும் தென் கிழக்கு திசையைப் பார்க்கக்கூடாது.
படுக்கை அறை தென்மேற்கில் இருப்பதே நலம்.
சமையல் அறை தென்கிழக்கில் அமைந்திருப்பது அவசியம்.
பூஜை அறை வடகிழக்கில் இருக்க வேண்டும்.
கிணறு நிச்சயமாக மனையின் வடகிழக்கு திசையில் அமைக்கப்பட வேண்டும்.
யின் மற்றும் யாங் எனப்படும் அடிப்படை ஃபெங்சுயி கொள்கைகள் உலகைப் பார்க்கும் பரந்த பார்வையைச் சுட்டிக் காட்டுவதோடு அது எப்படி உங்களை பாதிக்கிறது என்பதையும் கூறுகிறது. ஃபெங்சுயியின் இந்த அடிப்படை தத்துவத்தைப் புரிந்து கொண்டாலே நமக்கு ஏராளமான நன்மைகள் தானே வந்து சேரும்.
யின் என்பது பெண், இரவு, இருள், நிழல், குளிர்காலம், ஈரம், மிருது, குளிர், எதிர்மறை, பூமி, வடக்கு, கீழ்ப்பகுதி, செயலற்று இருப்பது, உள்முகம், தாழ்வானது, மந்தம், அமைதி, தனிமை, பள்ளத்தாக்கு, ஒரேநிலையில் இருத்தல், சுருங்கல் என்று வர்ணித்து விளக்கப்படுகிறது. யாங் என்பதோ ஆண். பகல், ஓளி, சூரியன், உலர்ந்தது, கோடைகாலம், சூடானது. உருவாக்குவது, செயல்துடிப்புடன் இருப்பது, கடினமானது, உடன்மறையானது, தெற்கு, மேல் பகுதி, வானம், வெளிமுகம், உயிர்த்துடிப்புள்ளது, உயரமானது, முன்னேறுவது, சத்தமிக்கது, சந்தடியுள்ளது, மலை, அசைவு, விரிவு என வர்ணிக்கப்படுகிறது.
மேலே தரப்பட்டுள்ள விவரத்தை நன்கு மனதில் இறுத்தி தேவையான இடங்களில் யின்னை அகற்றி யாங்கைக் கொண்டு வரலாம். எடுத்துக்காட்டாக வீட்டில் இருள் சூழ்ந்த பகுதி யின் ஆகும். அங்கே நல்ல வெளிச்சம் தரும் பல்பைப் பொருத்துவதன் மூலமோ அல்லது இயற்கை சூரிய வெளிச்சம் உள்ளே வரும் வகையில் ஜன்னலைத் திறந்து வைத்து ஒளியைப் பெறுவதாலோ யாங் சக்தி பெறலாம்.
கட்டிடம் கட்டுவதற்கு முன்னர் வாஸ்து சாஸ்திரம் சம்பந்தமான அனைத்தையும் ஒருங்கே செய்வதானது பல பரம்பரைகள் அங்கு குடியிருக்கும் சந்ததியினருக்கு நலத்தைத் தரும். ஆனால் வேக மயமான இன்றைய யுகத்தில் கட்டிடம் கட்ட வாய்ப்பும் வசதியும் அற்றவர்கள் அடுக்கு குடியிருப்பில் ஒரு ஃப்ளாட்டை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகின்றனர். கட்டிடம் கட்டுவோர் வாஸ்துவை எல்லா குடியிருப்புகளுக்கும் அமைப்பதில்லை. பணத்தில் குறியாக இருப்பவர்கள் தனக்குச் சேர வேண்டிய தொகையைப் பெறுவதில் நாட்டம் உடையவர்களாகவே இன்று பெரும்பாலும் இருப்பதால், அங்கு குடியேறுபவர்கள் என்ன செய்வது?
இப்போது தான் ஃபெங் சுயி நம் உதவிக்கு வருகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை இடிக்காமல் அங்குள்ள சக்திகளை நமக்கு நலம் தரும் வகையில் க்கிக் கொள்ள வழி வகைகளைச் சொல்லுகிறது.
சக்தி ஊட்டும் உபகரணங்களான பிரமிட், ஒலி இசைக்கும் மணிகள், வண்ண பல்புகள், மலர் மிதக்கும் நீருடைய பாத்திரங்கள், மணி பிளாண்ட், நல்லடையாள சின்னங்கள் போன்றவற்றைப் பாதிப்பிற்குள்ளாகும் இடத்தில் உரிய முறையில் பொருத்துவதன் மூலம் அந்தப் பாதிப்பைப் போக்க ஃபெங் சுயி வழிவகைகளைக் கூறுகிறது.
கட்டிடத்தின் திசைகளைக் காண கட்டாயம் ஒரு காம்பஸ் முதலில் வேண்டும். அப்போது தான் மையத்தை - பிரம்ம ஸ்தலத்தைக் கண்டுபிடித்து அதைச் சுத்தமாக்க இயலும். மைய இடத்தில் ஒரு சோபா செட் இருந்தால் உடனடியாக அதை மாற்றி அமைப்பதன் மூலமாகவே மிக நல்ல பலனைப் பெறலாம். தேவையற்ற அனைத்து குப்பைகளையும் உடனடியாக தயவு தாட்சண்யமின்றித் தூக்கி எறிவதன் மூலம் உடனடி மாற்றங்களை நமது பணப்பெட்டி இருப்பு காண்பித்து விடும்! (தினசரி குப்பையாக சேர்த்து வைக்கும் பால்பைகளை எத்தனை குடும்பங்களில் நாம் காண்கிறோம்! அந்தக் குப்பை விளைவிக்கும் தீய பலன்களை அவர்கள் அறிவதில்லை என்பது தான் பரிதாபம்!)
வளமாக வாழ வேண்டும் என்ற ஆசை மட்டும் போதாது. அதை எப்படிப் பெறுவது என்பதைச் சுட்டிக் காட்டும் சாஸ்திரங்களான ஃபெங்சுயி, மாற்றும் வாஸ்து பற்றி அறிய நேரமும் செலவிட்டு அதைக் கற்க வேண்டும். கற்றால் மட்டும் போதாது. (நிற்க அதற்குத் தக!) அதற்குத் தக நிற்கும் வகையில் அதைக் கடைப் பிடிக்க வேண்டும்.
உலகின் மிகப் பெரிய நிறுவனமான ஆரஞ்ச் நிறுவனத்தின் உரிமையாளர், "ஃபெங் சுயி பற்றி எனக்கு எதுவும் தெரியாது; அதில் முதலில் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் அந்த விதிகளின் படி அலுவலகத்தை மாற்றி அமைத்ததன் மூலமாக பிரமிக்க வைக்கும் விதத்தில் லாபம் உயர்வதைக் கண்கூடாகக் காண்கிறேன். ஆகவே அதை நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டேன்" என்கிறார்.
அனுபவம் போதிக்கும் பாடங்கள் ஆனந்தம்! ஆனந்தம் உருவாக வாஸ்து மற்றும் ஃபெங் சுயி ஒரு வழியானால் அதை அனுபவமாக்குவதில் ஆரஞ்சு நிறுவன உரிமையாளருடன் நாமும் சேரலாமே! வாஸ்து நமது சொத்து. அதன் பெருமையை அன்னியர் சொன்ன பிறகாவது உணர்வதே அறிவுடைமை!
No comments:
Post a Comment